தி.மு.க. கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும்: திருமாவளவன்
அ.தி.மு.க. விமர்சனங்கள் பொதுமக்களிடம் எடுபடவில்லை. தி.மு.க. கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும் என திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவளவன் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டிகிறார்கள்.
தாம்பரம் மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட கன்னடபாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடும் வாக்குச்சாவடியை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பார்கள். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற 8 மாதங்களில் நல்லாட்சியை வழங்கி பல பாராட்டுகளை பெற்று இருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியைபோல் சிதறாமல், சட்டசபை தேர்தலில் இருந்த அதே கட்டுக்கோப்புடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் தி.மு.க. கூட்டணி சந்தித்து வருகிறது. எனவே கூட்டணி பலமும், முதல்-அமைச்சரின் பலமும் எங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது.
விமர்சனம் எடுபடவில்லை
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 8 மாதமே ஆகிறது. அதற்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. ஆனாலும் இந்த 8 மாத ஆட்சி நிர்வாகத்தை சர்வே செய்த பல நிறுவனங்கள், இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர் என மு.க.ஸ்டாலினை பாராட்டி உள்ளன.
அனைத்து தரப்பு மக்களும் அவரது ஆட்சியை பாராட்டி வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வினரின் விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபடவில்லை.
தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு வருவார்கள்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் பதவிகள் குறித்து தி.மு.க. தலைவரோடு பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.