தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு 80% வேலைவாய்ப்பு - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் 80% வேலை வாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
“அரியாணா மாநில தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வழங்குவதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு இயற்றிய சட்டத்திற்கு அரியாணா மற்றும் பஞ்சாப் ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பு மூலம், அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் குவிவதாகவும், அதனால் நிறுவப்படும் புதிய தொழிற்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், படித்த, தொழிற்பயிற்சி பெற்ற தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை கிடைத்ததாக எந்த செய்தியும் வருவதில்லை.
இதற்குக் காரணம் தமிழகத்தில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தாரை வார்க்கப்படுவது தான். இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க வலியுறுத்தி வருகிறது.
குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஆந்திரம், தெலங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்காது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள வேலைகள் பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்களால் முடியவில்லை.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ,தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய தமிழக அரசுக்கு உள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80% தமிழக இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.”
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.