வீரப்பனின் அண்ணன் மாதையனுக்கு 'பரோல்' கேட்டு மனு; அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
34 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் பரோல் கேட்டு அளித்த மனுவிற்க்கு அரசு பதில் அளிக்குமாறு ஐக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது;
சென்னை
சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஈரோட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கு ஒன்றில் கடந்த 1987-ம் அண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி 34 ஆண்டுகளுக்கு மேல் சிறை உள்ளார். இந்நிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்தபோது, மாதையனையும் விடுவிக்கக் கோரி அவரது மகள் ஜெயம்மாள் கடந்த 2014-ம் ஆண்டு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
ஆனால் முன் கூட்டி அவரை விடுதலை செய்ய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து இதய நோய் சிகிச்சை பெற தன் தந்தைக்கு 30 நாட்கள் பரோல் கேட்டு ஜெயம்மாள் விண்ணபித்துள்ளார். அந்த மனுவுக்கு அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது தந்தைக்கு 30 நாட்கள் 'பரோல்' வழங்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயம்மாள் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர், சிறைத் துறை டிஜிபி, சேலம் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.