நகர்ப்புறங்கள் நலம் பெற பா.ம.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள்: டாக்டர் ராமதாஸ்
நகர்ப்புறங்கள் நலம் பெறுவதற்கு உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
தூய்மையான நிர்வாகம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பா.ம.க.வினர் மக்கள் பணியையே முழுநேர பணியாக செய்வார்கள். பா.ம.க. நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மையான நிர்வாகத்தை வழங்குவார்கள்.
ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் குவித்து வைத்திருக்கும் பணத்தை வாரி இறைத்து வாக்குகளையும், அதன் மூலம் வெற்றிகளையும் விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். அதில் அப்பாவி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. நம்மில் ஒருவரை உள்ளாட்சி அமைப்புக்கு தேர்ந்தெடுத்தால் மட்டும்தான் நமக்கான உரிமைகளை அவர்களிடமிருந்து கேட்டுப்பெற முடியும். மாறாக, ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்தால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கொள்ளையடிப்பதை மட்டும் தான் வேடிக்கை பார்க்க முடியும். அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது.
நல்ல மாற்றம்; சிறந்த தொடக்கம்
மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தலையும் கடந்து உள்ளாட்சி தேர்தல்கள்தான் மிகவும் முக்கியமானவை. அதுதான் மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றி வைக்கும் அதிகாரம் கொண்டவை. அத்தகைய பதவிகளுக்கு பா.ம.க.வினர் வந்தால், மக்களுக்கு நன்மை கிடைக்கும்; நகர்ப்புறங்களுக்கு நன்மை கிடைக்கும். அதை உணர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வின் வேட்பாளர்களுக்கு ‘மாம்பழம்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நல்ல மாற்றத்திற்கு இது சிறந்த தொடக்கமாக இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.