தி.மு.க. கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றியை தாருங்கள்: அமைச்சர் சேகர்பாபு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றியை தாருங்கள் என்று அமைச்சர் சேகர்பாபு பிரசாரம் செய்தார்.

Update: 2022-02-17 21:42 GMT
அமைச்சர் சேகர்பாபு பிரசாரம்

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பிரசாரம் செய்தார். பேரக்ஸ் சாலை, போர்த்துகீசிய தெரு, ஏழுகிணறு தெரு, குட்டி தெரு, ஏழுகிணறு மார்க்கெட், கோவிந்தப்ப தெரு, பி.வி. ஐயர் தெரு ஆகிய இடங்களில் வீதி, வீதியாக நடந்து சென்று ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பகுதியில் குடிசைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பாக கல்வீடுகள் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர். ஏழுகிணறு மார்க்கெட் பகுதியில் புதிதாக மார்க்கெட் உருவாக்கி தரவும் கேட்டுள்ளனர்.

மழைநீர் தேங்காத சீரான சாலைகள், கழிவுநீர் வெளியேற கட்டமைப்பு வசதிகள் இந்த பகுதியில் தேவைப்படுகிறது. இந்த பகுதியில் மின் தடையும் உள்ளது. புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்-அமைச்சருக்கும் சமந்தப்பட்ட அமைச்சருக்கும் கோரிக்கை வைத்து இந்த பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குடிநீரேற்று நிலையம் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கழிவுநீர் அடைப்பை சரி செய்ய 50 ஆண்டுகளுக்கு முந்தைய கழிவுநீர் குழாயை மாற்றி புதிய குழாய் அமைக்கும் பணியையும் மேற்கொள்ள இருக்கிறோம். கழிவு நீரேற்று நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்து இருக்கிறோம். இந்த 3 வசதிகளையும் அமைத்தால் இந்த பகுதியில் பெருவாரியான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்பதால் இவற்றை நிறைவேற்ற உறுதிபூண்டு இருக்கிறோம்.

100 சதவீதம் வெற்றி

மக்கள் எங்களை அன்போடு, பாசத்தோடு வரவேற்கிறார்கள். எனவே வெற்றியை தருவார்கள்.

மத்திய அரசின் கொரோனா பேரிடர் நிதி, ஜி.எஸ்.டி. வரித்தொகை வழங்கவில்லை. ‘நீட்’ மசோதாவையும் கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் முதல்வர் கரத்தை வலுப்படுத்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றியை மக்கள் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தகர் அணி செயலாளர்

சென்னை தேனாம்பேட்டை மண்டலம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் செய்திகள்