மலை அடிவாரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு...!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலை அடிவாரத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Update: 2022-02-17 10:12 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனக் காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தட்டையான வடிவத்தில் சிவப்பு நூல் சுற்றிய இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கும், கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அங்கு கிடந்த இரண்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணன் கோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,

மலை அடிவாரத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றோம். வனவிலங்குகளை வேட்டையாட இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார். 

தேர்தல் நேரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்