2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன
ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.;
ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் நேற்று புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மரம் நடும் ஆர்வம்
காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த 2019-ம் ஆண்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் தொடங்கப்பட்டது. காவேரிக்கு புத்துயிரூட்டுவது, சுற்றுச்சூழலுடன் இணைந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு விவசாயிகள் மத்தியில் மரம் நடும் ஆர்வமும், மரம் சார்ந்த விவசாயம் செய்வது குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. எங்கள் இயக்கம் மூலம் விழுப்புரத்தில் 1,700 விவசாயிகள் 6.33 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலையில் 1,600 விவசாயிகள் 5.29 லட்சம் மரக்கன்றுகளும், கடலூரில் 1,500 விவசாயிகள் 4 லட்சம் மரக்கன்றுகளும், புதுச்சேரியில் 284 விவசாயிகள் 1.16 லட்சம் மரக்கன்றுகளும் நட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 1.25 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறி உள்ளது. நடப்பாண்டில் 3 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
242 கோடி மரக்கன்றுகள்
ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கிய நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் இயக்கமும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. இயக்கம் தயாரித்த, நதிகளை புத்துயிரூட்டுவதற்கான விரிவான செயல்முறை அடங்கிய 700 பக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் செயல்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சத்தீஷ்கர், உத்தரகாண்ட், ஒடிசா, மராட்டியம், பஞ்சாப், கர்நாடகாஆகிய மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. 2031-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகாவில் 242 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.