மாணவர்களிடம் கல்விக்கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது

சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2022-02-16 17:27 GMT
சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேர்க்கை ஆணை
கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2021-22ம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் விழா இ்ன்று மாலை கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்கள் தற்போது பள்ளி பருவத்தை முடித்து கல்லூரிக்கு வந்துள்ளீர்கள். பள்ளிகளில் நிறைய கட்டுப்பாடு இருக்கும். ஆனால் கல்லூரிக்கு வரும் போது கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. நாம் சுதந்திரமாக இருப்போம். இதனால் நாம் படிக்காமல் இருந்து விடக்கூடாது. அதுவும் நீங்கள் மருத்துவ படிப்பிற்கு வந்துள்ளீர்கள். இது மிகவும் சிரமமான படிப்பு. எனவே நீங்கள் முன்பை விட அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். படிப்பிற்காக அதிக நேரம் செலவு செய்ய வேண்டும்.
பெற்றோர் கனவை...
சென்டாக்கில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு தான் இந்த கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக நீங்கள் அதிக நேரம் செலவு செய்து படித்திருப்பீர்கள். நீங்கள் சிறந்த மருத்துவர்களாக வரவேண்டும் என்ற உங்களின் பெற்றோர் கனவை நினைவாக்க வேண்டும்.
கடந்த ஆண்டு 150 மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர்ந்தனர். அவர்களில் 39 பேர் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். மாணவர்களிடம் ஏன் இந்த தடுமாற்றம் என தெரியவில்லை. பெற்றோரின் சிரமத்தை எண்ணி பார்த்து மாணவர்கள் படிக்க வேண்டும்.
சிறப்பு அறுவை சிகிச்சை
வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு மருத்துவர்களை புதுவைக்கு வரவழைத்து அரசு பொது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 13 அறுவை சிகிச்சை கூடங்கள் உள்ளன. இங்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்களை வரவழைத்து இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு அறுவை சிகிச்சைகள் செய்யும் போது இந்த மாணவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கல்விக்கட்டணம்
இந்த கல்லூரியில் பட்ட மேற்படிப்பு விரைவில் தொடங்கப்படும். சென்டாக் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே செலுத்தி வருகிறது. மாணவர்கள் சேரும் போதே இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சில தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோரிடம் அறிவுறுத்துகிறது. இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் செல்லும் மாணவர்களை தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணம் செலுத்துமாறு தொல்லை கொடுக்காமல் சேர்த்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசு கண்டிப்பாக செலுத்தும். இந்த அரசு சொன்னதை செய்யும் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
150 மாணவர்களுக்கு அனுமதி சீட்டு
விழாவில் 150 மாணவ-மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. விழாவில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவமனை இயக்குனர் டாக்டர் உதயசங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மேலும் செய்திகள்