திருச்சி சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகள் மோதல்
திருச்சி சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகள் திடீரென மோதி கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி,
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும் அல்லது வழக்கு முடிந்து அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரையிலும் சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்படுவர்.
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் சமைத்து உண்பதற்கும், செல்போன், மடிக்கணினி போன்றவற்றை பயன்படுத்தவும் அனுமதி உள்ளது. இந்தநிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஒரு அறையில் 2 நைஜீரிய கைதிகளும், ஐவரிகோஸ்ட் சேர்ந்த டேவிட் என்ற கைதியும் தங்கியிருந்தனர்.
இவர்களுக்குள் அறையை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில் டேவிட் நேற்று காலை தனது உறவினருக்கு போன் செய்வதற்காக நைஜீரிய கைதியான நிக்கிபிலிப்பிடம் செல்போனை கேட்டுள்ளார். அதற்கு அவர் செல்போன் தர எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பான வாக்குவாதத்தில் இருவரும் மோதி கொண்டனர். இதில் ஐவரி கோஸ்ட் கைதி டேவிட் மற்றும் விலக்கிவிட சென்ற மற்றொரு நைஜீரிய கைதி நிக்கிபிலிப் காயமடைந்தனர். இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.