5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.;

Update: 2022-02-12 18:50 GMT
5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மத்திய இணை            மந்திரி எல்.முருகன் கூறினார்.
உள்கட்டமைப்பு
புதுச்சேரிக்கு வந்த மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை     இணை மந்திரி      எல்.முருகன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில்        நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தலைசிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கதி சக்தி என்ற திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாகும். பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஆத்ம நிர்பார் பாரத் திட்டம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்.
மக்கள் பேராதரவு
தமிழகம், புதுவையில் மீனவர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். கடந்த 70 ஆண்டுகளாக மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்களுக்கு என்று தனியாக துறை அமைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 
கடந்த ஆண்டு பட்ஜெட்டுடன், நடப்பாண்டு பட்ஜெட்டை ஒப்பிட்டு பார்க்கும்போது 70 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பா.ஜனதாவுக்கு மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். 
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு
இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்படும் தமிழக, புதுவை மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு வரை மீனவர்கள் மீது தினமும் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. அதன்பிறகு ஒரு துப்பாக்கி சூடு சம்பவங்கள் கூட நடக்கவில்லை. மீனவர்களின் பாதுகாப்பில் பா.ஜ.க. அரசு அதிக அக்கறை செலுத்துகிறது.  மீனவர் பிரச்சினை தொடர்பாக தீர்வு காண இரு நாடுகளும் தனி குழு அமைத்தது. கொரோனா பரவல் காரணமாக அந்த குழு கூடவில்லை. மீண்டும் அந்த குழு கூடி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ராமாயணமும், மகாபாரதமும்    இந்திய  தேசத்தின் இதிகாசங்கள்.      அதனை நமது முன்னோர்      நல்நெறி  இதிகாசங்களாக   போற்றினார்கள்.
வெற்றி வாய்ப்பு
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒடுக்கப்பட்டவர்கள் இந்த கட்சியில் தான் இருக்க வேண்டும் என்று எதுவும் கிடையாது. யாரும் எந்த கட்சியிலும் இருக்கலாம். இந்தியாவிலேயே பா.ஜ.க.வில் தான் பட்டியல் இனத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு பா.ஜ.க. உரிய அங்கீகாரம் வழங்கி உள்ளது. 
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்திலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் போகும் இடமெல்லாம் பா.ஜ.க.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். நிச்சயம் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு, ரிச்சர்டு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

மேலும் செய்திகள்