வகுப்பறையில் மாணவிகளை நடனமாட கூறி தொந்தரவு... ஆசிரியர் கைது
வகுப்பறையில் மாணவிகளை நடனமாட கூறி தொந்தரவு செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 42). இவர் மலையப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்று உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் சின்னதுரை குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்ததாகவும், அங்கிருந்த சில மாணவிகளின் உடைகளை மாற்றி வரச்சொல்லி, செல்போனில் பாடலை ஒலிக்கவிட்டு நடனமாட வேண்டும் என்று துன்புறுத்தியதாகவும், வகுப்பறையின் ஜன்னல் கதவை மூட முயன்றதாகவும், சில்மிஷம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வகுப்பறையில் இருந்து சென்ற மாணவிகள் இது பற்றி தங்களுடைய பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து, ஆசிரியர் சின்னதுரைக்கு தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் சின்னதுரை மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.