நீட் குறித்து விவாதிக்க தயாரா? - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Update: 2022-02-10 12:56 GMT
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோட்டில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக தேர்தலுக்காக உருவானதல்ல. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற உருவான இயக்கமே திமுக. தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி திமுக ஆகும்.

திமுக ஆட்சி இதுவரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய ஆட்சியாக இருந்தது, இனியும் இருக்கும். மக்களின் கோரிக்கைகளை உடனடியாக திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.  

நீட் தேர்வு, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே அமலுக்கு வந்தது. நீட் தேர்வை திமுக, காங்கிரஸ் கொண்டு வந்ததாக அதிமுக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறது.

நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. 

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலை உருவாகும். நான் நிரந்தர முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்ல; திமுக தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காக ஆகும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது; இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார். நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதிக்க தயாரா?’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

மேலும் செய்திகள்