2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் - காரணம் என்ன...?

சோளிங்கர் அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்ற போது உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.

Update: 2022-02-10 06:17 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள அம்மனேரி பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய மனைவி ரேகா. இவர்களுக்கு கோமதி( 12 ) மற்றும் தீபிகா ( 8) என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

முரளி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கின்றார். இதனால் கடன் தொல்லை மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் மனமுடைந்த ரேகா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கவலையில் உள்ள மகளுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி அவரது தாய் தேற்றி வந்தார். 

இந்த நிலையில் தனது தாய் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் இரண்டு மகள்களையும் தள்ளிவிட்டு ரேகாவும் கிணற்றில் குதித்தார்.

சத்தம் கேட்டு  ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த ரேகாவை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

ஆனால் அதற்குள் கோமதி, தீபிகா இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி விட்டனர். கிணற்றில் மூழ்கிய 2 சிறுமிகளை நீண்ட நேரம் தேடியும் காணவில்லை.

பின்னர் இதுகுறித்து தகவலை ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்