நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள வங்கியில் தீ விபத்து
இன்வர்ட்டர் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ஸ்ரீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், இன்று அங்குள்ள இன்வர்ட்டர் அறையில் மின்கசிவு ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வங்கியில் உள்ள தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் வங்கியின் சீலிங் முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது.
இதனை தொடர்ந்து வங்கியில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் உடனடியாக வங்கியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் வங்கி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு தீப்பிடிக்க தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நெல்லை பாளையங்கோட்டை, பேட்டை பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
வங்கியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் பரவியதால் அருகில் இருந்த கடைகள் மற்றும் வளாகத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வங்கி முழுவதும் புகைமூட்டம் பரவி இருந்ததால், வங்கியின் பக்கவாட்டு சுவரை இடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் பகுதிகளை இணைக்கும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்வர்ட்டர் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வங்கியில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.