தற்காலிக ஊழியர்கள் சட்டவிரோதமாக பணியில் நீடித்தால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!
சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கண்ணம்மாள் கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர் பதவியில் நீடித்து 2005ல் ஓய்வு பெற்றார். அப்போது தனது பணியை பணிவரன் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அவரது பணி வரன்முறை செய்யப்பட்டது.
அதே வேளையில் அவர் பணியாற்றிய காலத்திற்கான ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை தர முடியாது என்று 2008ல் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து கண்ணம்மாள் தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இளநிலை உதவியாளராக கண்ணம்மாள் பணியாற்றியபோது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை. மேலும் தவறுதலாக அவரது பெயரை தமிழ் ஆசிரியர் பட்டியலில் சேர்த்ததால் ஊதிய உயர்வுக்கு தகுதி பெறவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இளநிலை பணியாளர் மற்றும் தமிழ் ஆசிரியர் போன்ற பணிகள் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டுமே தவிர, அவருடைய கல்வி தகுதியை ஆராயாமல் தமிழ் ஆசிரியராக 23 ஆண்டுகள் பணியாற்ற அனுமதித்தது சட்டப்படி தவறு என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதை போன்று சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.