இறுதிநாளில் வேட்புமனு தாக்கலுக்கு பல கட்சியினர் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு

வேட்புமனு தாக்கலின் இறுதிநாளான நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மண்டல அலுவலகங்கள் திருவிழா கூட்டம் போன்று காட்சி அளித்தன.;

Update: 2022-02-04 23:10 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நடத்தி வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டன. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி தொடங்கியது.

இந்த நிலையில் முதல் இரண்டு நாட்களில் 4 பேர் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து 3-வது நாளில் 60 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 1,400-க்கும் மேல் உயர்ந்தது.

இறுதிநாளில் விழாக்கோலம்

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் இறுதிநாளான நேற்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் நேற்று தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேட்பாளர்களை தவிர்த்து ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தினர்.

மண்டல அலுவலகங்களில் பல கட்சியினர் ஒரே நேரத்தில் சூழ்ந்ததால் மண்டல அலுவலகம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஒரு வார்டுக்கு பலர் ஒரே நேரத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வந்ததால் வேட்பாளர்கள் வரிசையில் அழைக்கப்பட்டனர்.

காத்திருக்கும் வேட்பாளர்கள் அமர்வதற்காக மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்