நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு எதிரானது நாராயணசாமி பேட்டி
நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.;
புதுச்சேரி
நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
வெடிகுண்டு வழக்கு
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு எனது வீட்டில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். தமிழ் அமைப்பை சேர்ந்தவர் தீவிரவாத உறுப்பினர்களாக இருந்து திட்டமிட்டு என்னை கொலை செய்வதற்காக வெடிகுண்டு வீசினர். அப்போது நான் வீட்டில் இல்லாத காரணத்தாலும், வெடிகுண்டு வெடிக்காத காரணத்தாலும் நான் தப்பித்தேன்.
நாடு அமைதியாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும். குறிப்பாக தமிழகம், புதுவையில் அமைதி நிலவ வேண்டும். தீவிரவாதிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பானது மிகப்பெரிய படிப்பினையை தந்துள்ளது.
ஒற்றர்கள்
தமிழகத்தில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு சட்டசபையில் நிறைவேற்றி நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கு எதிரானது. கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
இதுதொடர்பாக புதுச்சேரியில் கவர்னர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அரசின் சட்டவரையறையை திருப்பி அனுப்புவதற்கு கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக கூறியுள்ளார். மாநிலங்களை பொறுத்தவரை சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றினால் கவர்னர் விளக்கம் கேட்கலாம். விளக்கம் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அதை தமிழக கவர்னர் மீறி இருக்கிறார். குறிப்பாக மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் ஒற்றர்களாக கவர்னர்கள் செயல்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.