எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...! பட்டாகத்தியுடன் பந்தாவா வீடியோ போட்டவர் மன்னிப்பு கேட்டார்.

பந்தாவா வீடியோ போட்டவர் லைக், பின்தொடருவோருக்காக ஆசைப்பட்டு இது போன்ற வீடியோவை பதிவிட்டு விட்டேன். மன்னித்து விடுங்கள் என கூறி உள்ளார்.;

Update: 2022-02-04 12:22 GMT
சென்னை

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வினித். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது   இன்ஸ்டாகிராம்மில் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில், கையில் பட்டா கத்தி ஒன்றை வைத்து கொண்டு கானா பாடல் ஒன்றை வினீத் பாடுவது பதிவாகி இருந்தது. இதனை பிற சமூகவலை தள பக்கத்திலும் வினீத் பதிவிட்டு வைரல் செய்தார். 

கத்தியுடன் வீடியோ பதிவிடுவது வன்முறையை தூண்டுவது போல் உள்ளதால் இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். 

வீடியோ பதிவிட்ட வினீத்தை தனிப்படை போலீசார் தேடினர். ஆனால் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இன்று வினீத்தை பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில் வினீத் மீது எந்த வழக்கும் இல்லை என்பது தெரிய வந்தது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகமானோர் தன்னை பின்தொடர வேண்டும், லைக்ஸ் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கத்தியுடன் வீடியோ பதிவிட்டதாக வினீத் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் வினீத்தை எச்சரித்து இதுபோன்று வீடியோக்களை இனி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய மாட்டேன் என கடிதம் எழுதி வாங்கினர். வினீத்தின் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட வன்முறையை தூண்டக்கூடிய வகையில் உள்ள அனைத்து வீடியோக்களையும் காவல்துறையினர் பதிவு நீக்கம் செய்துள்ளனர்.  

லைக், பின்தொடருவோருக்காக ஆசைப்பட்டு இது போன்ற வீடியோவை பதிவிட்டு விட்டேன். மன்னித்து விடுங்கள். இது போன்று யாரும் செய்யாதீர்கள்" என்று கூறி வினீத் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோல் ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் செய்திகள்