ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படும் அறநிலையத்துறை அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடிக்க கூடாது?

ஆக்கிரமிப்பாளர்களுடன் கை கோர்த்து செயல்படும் அறநிலையத்துறை அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடிக்க கூடாது? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.;

Update: 2022-02-03 21:17 GMT
சென்னை,

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சேவியர் பெலிக்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் செயல் அலுவலரின் செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்தும், அதை கோவில் செயல் அலுவலர் அமல்படுத்தவில்லை என்று கூறினர்.

ஊதியம் பிடிப்பு

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

கோவில் சொத்துகளை மீட்க இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கோவில் சொத்துகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை ஊக்குவித்தது கோவில் நிர்வாகம்தான். கோவில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர்.

கடமையை செய்வதற்குதான் செயல் அலுவலர்களுக்கும், இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏ.சி. அறையில் உட்காருவதற்கு அல்ல. செயல்படாத இந்த அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது?.

அதிகாரிகளின் பட்டியல்

இந்த கோவில் நிலத்தில் 1,640 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும். அவரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது ஏன் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மேற்கொள்ளவில்லை?.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோவில் சொத்துகளை மீட்க இந்த ஐகோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, அந்த ஆண்டு முதல் கோவில் செயல் அலுவலர்களாக பணியாற்றியவர்களின் பெயர் பட்டியலை அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

என்ன நடவடிக்கை?

தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, சொத்துகளை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்