குளத்தில் கிடந்த வெள்ளி சிவன் சிலை

குளத்தில் கிடந்த வெள்ளி சிவன் சிலை குளிக்க சென்றவர்கள் கண்டெடுத்தனர்.

Update: 2022-02-03 20:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் பரிவிரிசூரியன் கிராமத்தில் உள்ள குளத்தில் பொதுமக்கள் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குளத்தில் கிடந்த ஒரு பொருள் மீது கால் மோதியது. உடனே தண்ணீரில் மூழ்கி அதனை எடுத்து பார்த்தவர்கள் திடுக்கிட்டனர். அது சிவன் சிலை என்று தெரியவந்தது. அந்த சிலை ஒரு அடி உயரம் கொண்டது ஆகும். சுமார் 20 கிலோ வெள்ளியினால் அந்த சிலை செய்யப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து வந்த பணகுடி போலீசார் சிலையை மீட்டனர். அதன்பிறகு பணகுடி வருவாய் ஆய்வாளரிடம் அந்த சிலை ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சிலை ராதாபுரம் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.வெள்ளியினால் ஆன சிவன் சிலை குளத்திற்கு வந்தது எப்படி? என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் அந்த சிலையை எங்காவது எடுத்து வந்து குளத்தில் வீசிச்சென்றார்களா? அல்லது சிலையை எங்காவது திருடி கடத்தி வரும்போது போலீசுக்கு பயந்து குளத்தில் வீசினார்களா? என்பது பற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்