நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் திமுக எத்தனை இடங்களில் போட்டி?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடப்பங்கீடு, கூட்டணி, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 163 இடங்களில் திமுக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய 37 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 17, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3, மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1, மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 வார்டும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.