யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்

யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.;

Update: 2022-02-02 07:57 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்காக நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக 1 லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்களையும், 80 ஆயிரம் போலீசாரையும் தேர்தல் அலுவலர்களாக நியமித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், தேர்தல் நடைபெறக்கூடிய பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின் போது குழறுபடிகள் நடைபெறுவதால், தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளை தவிர்த்து ஏற்கனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டதால் அந்த பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்களை தேர்தல் அதிகாரிகளாக என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் அதிமுக சார்பில் வழக்குத்தொடரப்பட்டது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தலை நியாயமாக நடத்துவதற்காக ஊரக பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்களையே தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இது தொடர்பாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தை பரீசிலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலூ அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்தமுடியாது. இதுபோன்று தொடரப்பட்ட வழக்குகள் கண்டிக்கத்தக்கது. தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போததாக நீதிபதிகள் எச்சரிக்கைவிடுத்தனர். இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்