தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
திண்டுக்கல்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவி லாவண்யா (வயது 17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார். இதற்கிடையே மதம் மாறும்படி வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் சஞ்சீவிராஜ், துணை தலைவர் வினோத்ராஜ், ஆர்.எஸ்.எஸ். நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போலீஸ்நிலையத்தில் திரண்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தை வாலிபர் ஒருவர் செல்போனில் படம் எடுத்ததற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை, வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் இந்து முன்னணியினரும், வாலிபருக்கு ஆதரவாக சிலரும் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி
இதுபோல பழனி நகர, ஒன்றிய இந்து முன்னணி சார்பில் மயில் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன், பொருளாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பாளர் செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.