முழு ஊரடங்கு: கோவையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்...! படம் உள்ளே...
முழு ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள பல்வேறு சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ‘ஒமைக்ரான்’ வைரசும் அச்சுறுத்துகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனர்களும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு காரணமாக இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.‘டாஸ்மாக்’ மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயங்குகின்றன ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படுகின்றன.
ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் நடந்த வாகன தணிக்கையை சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் ஆணையர் கண்ணன், "ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவர்கள் போன்ற அவசர தேவைக்கு செல்லும் வாகனங்களை வாகன தணிக்கையில் ஈடுபடுத்தி தாமதிக்காமல் அவர்கள் விரைந்து செல்ல ஏதுவாக சாலைகளில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு செல்லும் பொது மக்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
அவசரத் தேவையாக பொதுமக்கள் வெளியில் வந்து வாகனத் தணிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டாலும் அல்லது வேறு எதுவும் அவசர தேவை என்றாலும் காவல்துறையினரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். அதற்கென 9498181239 மற்றும் 9498181236 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. ஊரடங்கில் விதிகளை மீறி வெளியில் வரும் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கான அபராதம் செலுத்திய பின்னர் ஆறு நாட்களுக்குப் பிறகு உரியவரிடம் ஒப்படைக்கப்படும்" எனக் கூறினார்.
இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு காரணமாக கோவை மணிக்கூண்டு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு காரணமாக கோவை உக்கடம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு காரணமாக கோவை காந்திபுரம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு காரணமாக கோவை ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.