காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் தயாரித்த குறும்படம் முதலிடம்

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தயாரித்த போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் முதல் இடத்தை பிடித்தது.

Update: 2022-01-06 19:18 GMT
சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இன்றைய இளைய தலைமுறையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டியை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு இடையே ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் இப்போட்டியில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ‘மவுனம் கலைவோம்’ என்ற தலைப்பில் தயாரித்த குறும்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் போதைபொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

தத்ரூபமான காட்சிகள்

4 நிமிடங்கள் 47 வினாடிகள் ஓடும் இந்த குறும்படத்தில், ‘போதை ஊசி விற்பனை கும்பலை பார்த்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் செல்லும் நபர், தன்னுடைய மகனே போதை ஊசிக்கு அடிமையாகி இருப்பதை கண்டு மனம் கதறுவது, கஞ்சா வாங்குவதற்காக கஞ்சா போதையில் 2 வாலிபர்கள் பெண்ணிடம் செயின் வழிப்பறியில் ஈடுபடும்போது, அந்த பெண் தலையில் அடிபட்டு உயிரிழப்பது, அபின் போதை பொருளை பயன்படுத்தும் 2 இளைஞர்கள் மாணவிகளை கடத்தி செல்வது போன்று தத்ரூபமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

விழிப்புணர்வு வாசகங்கள்

போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தை உருவாக்குகிறது. இதுதான் பல குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு போதைப்பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே போதை பொருள்கள் விற்பனை தெரிந்திருந்தும் அமைதியாக இருந்தால், அவர்களும் துணை போவதாகத்தான் அர்த்தம். இப்போதும் அமைதியாக இருந்தால் நம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் செய்யும் துரோகம் ஆகும்.

எனவே போதைப்பொருட்களுக்கு எதிரான யுத்தத்தில் தமிழக போலீஸ்துறையை நண்பனாக ஏற்றுக்கொண்டு ஒத்துழைத்தால் தமிழகத்தில் போதையால் ஏற்படும் குற்றங்களை தடுக்கலாம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் படத்தில் உள்ளன.

‘வாட்ஸ்-அப்’ புகார் எண்

போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வு பிரிவின் 94984 10581 என்ற ‘ வாட்ஸ்-அப்’ எண்ணில் யார் போதை பொருட்களை பயன்படுத்தினார்கள்?, எங்கே கைப்பற்றினார்கள்? எப்போது விற்பனை செய்தார்கள்? என்ற தகவலை கொடுக்கலாம்.

தகவல் கொடுப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். நீங்கள் புகார் அனுப்பும் அதிகாரியாலே, உங்களுடைய பெயரையோ, போன் எண்ணையோ கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பாக இந்த எண் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே யாரும் பயப்படவோ, தயங்கவோ தேவையில்லை. அரசாங்கம் என்றைக்கும் உங்களுக்கு துணையாக நிற்கும். போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிரான யுத்தத்தில் நாம் அனைவரும் கண்ணுக்கு தெரியாத போர் வீரர்கள்தான். எனவே இந்த போரை உடனடியாக தொடங்குவோம் என்று விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தயாரித்துள்ள இந்த குறும்படம் இளைய சமுதாயத்துக்கு பாடமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்