ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

வில்லியனூர் அரசு சாராய ஆலை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது மேலாண்மை இயக்குனர் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-12-29 18:56 GMT
வில்லியனூர் அரசு சாராய ஆலை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம்    நடத்தினர். அப்போது  மேலாண்மை இயக்குனர் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பணி நிரந்தரம் 
வில்லியனூரை அடுத்த ஆரிய பாளையத்தில் அரசு வடிசாராய ஆலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று காலை ஆலைக்கு வந்த ஒப்பந்த ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை செய்யாமல் திடீரென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாலை வரை போராட்டம் நடந்தது.
கேட்டை இழுத்து மூடினர்
இந்த நிலையில் சாராய ஆலையின் மேலாண் இயக்குனர் சச்சிதானந்தம் பணி முடிந்து வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். அவரது வாகனத்தை மறித்து, ஆலையின் கேட்டை இழுத்து மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுபற்றி தகவல் அறிந்த மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீசார் சாராய ஆலைக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியர்களின் கோரிக்கை குறித்து நாளை (இன்று) ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்தார். இதையடுத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். பணிநிரந்தரம் குறித்து முடிவு தெரியாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்