புதுச்சேரியின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கவேண்டும் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரியின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-12-27 16:41 GMT
புதுச்சேரி
புதுச்சேரியின்   வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொல்காப்பியர் சிலை

லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி மொழியியல் பண்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த  சிலை  திறப்பு மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா  நடந்தது.
விழாவுக்கு    அமைச்சர் லட்சுமி  நாராயணன் தலைமை    தாங்கினார். அமைச்சர்   சந்திரபிரியங்கா முன்னிலை வகித்தார். விழாவில் தொல்காப்பியரின் சிலையை திறந்து வைத்து, 6 ஆய்வு புத்தகங்களை முதல்-அமைச்சர்    ரங்கசாமி வெளியிட்டார்.

ரங்கசாமி

அப்போது அவர் பேசியதாவது:-
தொல்காப்பியம் தான் தமிழின் அடிப்படை புத்தகம். இதில் இருந்து தான் தமிழ் இலக்கணங்கள் உருவானது. தொல்காப்பியரின் சிலையை திறக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தொல்காப்பியர் தான் எழுதிய புத்தகத்துக்கு தொல்காப்பியம் என்ற பெயர் சூட்டியுள்ளார். அந்த தைரியம் தமிழனுக்குத்தான் வரும்.
ஆராய்ச்சிகளுக்கு அறிவும், பொறுமையும், ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்.   பழம் பெருமை வாய்ந்த புத்தகங்களை படித்து அதன் சாராம்சங்களை         வருங்கால சமுதாயத்துக்கு    மாணவர்கள் எடுத்துக்கூற வேண்டும்.

புதுச்சேரி வரலாறு

மக்கள் சிறப்பாக இருந்தால் தான் மொழி நன்றாக இருக்கும். மொழி சிறப்பாக இருக்க ஆராய்ச்சிகள் முக்கியம். ஆராய்ச்சி நடைபெறும் இடங்களில்     நூலகங்கள் சிறப்பாக இருக்கவேண்டும்.
புதுவையின் வரலாறு நமக்கும், நமது குழந்தைகளுக்கும் தெரியவேண்டும். தமிழ்மொழி வளர்ச்சிக்கு பழைய புத்தகங்களை ஆராய்ச்சி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. புதுச்சேரியின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம்பெற செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளோம்.
பாரதிதாசனின் பாடல்கள் மிக எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். இதுபோன்ற பாடல்கள் மூலம் வரலாற்றை குழந்தைகள்   கற்று  பயன் பெறுவர்.
இவ்வாறு ரங்கசாமி கூறினார்.
நிகழ்ச்சியில்     வைத்திய நாதன் எம்.எல்.ஏ., கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்