திருநள்ளாறில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை மறுசுழற்சி செய்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

திருநள்ளாறில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை மறுசுழற்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-12-25 15:25 GMT
காரைக்கால்
திருநள்ளாறில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை மறுசுழற்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தரமற்ற உணவு

திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள். இதற்காக கோவிலை சுற்றி ஏராளமான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இந்தநிலையில் இங்குள்ள உணவகங்களில் தரமற்ற முறையில் உணவு, குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக அன்னதானம் செய்வார்கள். இதற்காக உணவகங்களில் இருந்து உணவு பொட்டலங்களை வாங்கி பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அப்போது பக்தர்களில் சிலர் போர்வையில் வாங்கி அந்த உணவு பொட்டலங்களை மீண்டும் உணவகங்களில் கொடுத்து மறுசுழற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

கடும் நடவடிக்கை

இதைத்தொடர்ந்து புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் திருநள்ளாறு மற்றும் அதனை சுற்றியுள்ள உணவகம், டீக்கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில உணவகங்களில் தரமற்ற முறையில் உணவு தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக அன்னதானமாக வழங்கப்படும் உணவு பொட்டலங்களை பக்தர்கள், யாசகர்கள்போல் நடித்து வாங்கி, அதனை மீண்டும் அதே உணவகத்தில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை மறுசுழற்சி செய்தால் சம்பந்தப்பட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்