‘பா.ம.க.வின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது’ டாக்டர் ராமதாஸ் பேச்சு

பா.ம.க.வின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.;

Update: 2021-12-24 22:00 GMT
சென்னை,

பா.ம.க. செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில வன்னியர் சங்க செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

இளைஞர்களின் கையில்

பா.ம.க.வின் ஒற்றை இலக்கு தமிழ்நாட்டை நாம் ஆளவேண்டும். 42 ஆண்டுகளாக இந்த மக்களுக்காக போராடி, வாதாடி வருகிறேன். ஆனால் அதற்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை. இனி இந்த கட்சியின் எதிர்காலம் இளைஞர்களான உங்கள் கையில்தான் உள்ளது.

அன்புமணியை போல ஒரு திறமைசாலி யாரும் கிடையாது. இனி மீண்டும் நாம் ஆள வேண்டும். நம்மிடம் ஆட்சி வரவேண்டும். ஆகையால் கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்து திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.

இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள் தொகை உள்ள நாம் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டோம். ஆனால் நமக்கு 10.5 சதவீதம் கொடுத்ததற்கு மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டு சென்றனர். 84 வயதிலும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இறுதிவரை வன்னிய மக்களுக்காக போராடுவேன், ஒருமுறை மாற்றத்தை நான் பார்க்க வேண்டும். நமது இலக்கை அடைய சிகரத்தை எட்டி பிடிக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்