தமிழகத்தில் 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-22 22:17 GMT
சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் தகவல் குறித்த டிஜிட்டல் பலகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன், ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சாந்திமலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

தமிழகத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழக விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, அதிக ஆபத்தான நாடுகள், குறைந்த ஆபத்தான நாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 104 பேருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு (ஒமைக்ரான் தொற்று அறிகுறி) கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 82 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் மட்டும் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை 13 பேரின் முடிவுகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதில் ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

669 பேருக்கு டெங்கு

8 பேருக்கு டெல்டா வகை தொற்று பாதிப்பும், 4 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற முடிவும் வந்துள்ளது. 22 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும். தமிழகத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 667 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 669 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை டெங்குவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்