நடிகர் மம்முட்டியின் நிலத்தை புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக வகைமாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-12-21 23:24 GMT
சென்னை.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘‘இந்த சர்ச்சைக்குரிய நிலம் 2007-ம் ஆண்டு வாங்கப்பட்டது. அப்போது, தனியார் நிலம் என அந்த நிலம் வகைப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைபடுத்தப்பட்டுள்ளது. இதை ரத்துசெய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

விளக்கம் கேட்கவில்லை

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த நிலம் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மம்முட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மனுதாரர்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் அரசு நிலத்தை மறுவகைப்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது’’ என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, அரசின் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

உத்தரவு ரத்து

அதில், ‘‘மனுதாரர்களின் நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைப்படுத்தி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அதேசமயம், இந்த விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்புகிறேன். அவர், மனுதாரர் மம்முட்டி உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு, அதை பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்