ராஜேந்திர பாலாஜி எங்கே? செல்போன்கள் வைத்து தீவிர கண்காணிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க தனிப்படை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் சுமார் ரூ.3 கோடி வரை பெற்று, பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் அவரது கூட்டாளிகளான என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை காலம் என்பதால் இந்த மேல்முறையீடு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரியும் அவரது சார்பில் கோரிக்கை மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க தனிப்படை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜேந்திர பாலாஜியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதுஅதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.