நெல்லையில் பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; தாளாளர் உட்பட 3 பேர் கைது
நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை,
நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்தநிலையில் நெல்லை தனியார் பள்ளியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாஃப்டர் பள்லியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.