'டிங்கிடி டிங்காலே, டிங்கிடி டிங்காலே' - ஜெயக்குமாரின் கவனம் ஈர்த்த போராட்ட பாடல்
சென்னையில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கழுத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் மாலையுடன் பங்கேற்ற ஜெயகுமார், போராட்டத்தின் போது, 'டிங்குடி டிங்காலே ..ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே ' என பாடலோடு முழக்கங்களை எழுப்பினார்.
சென்னை,
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டம் முதலில் 9-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு 11-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
அதன்பிறகு 17-ந்தேதிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில், சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார். விலைவாசி உயர்வைக் குறிப்பிடும் வகையில் கழுத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் மாலைகளை அணிந்தும் , பாடல் பாடியும் முழக்கங்களை எழுப்பியதோடி, காமெடியாக பேசி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தமிழகத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக கடுகு , சீரகம் , உளுந்தம் பருப்பு , கொண்டைக் கடலை , பொட்டுக் கடலை , வெந்தயம் , உப்பு , மிளகாய் , சேமியா பாக்கெட்டுகள் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றையும் , வெங்காயம், தக்காளி , வெண்டைக்காய் , கோவைக்காய் , பச்சை மிளகாய் கோர்க்கப்பட்ட மற்றுமொரு மாலையையும் கழுத்தில் அணிந்துகொண்டு ஜெயகுமார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
மேலும் திமுக ஆட்சி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே ..தலையில் துண்டு போட்டுகனு ங்கமே தில்லாலே..." என பாடல் பாடியதுடன் , வெறும் 2 மணி நேரத்தில் இப்பாடலை தான் எழுதியதாக கூறியதை தொடர்ந்து அங்கு நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அண்ணன் ஜெயக்குமார் வாழ்க என உற்சாகக் குரல் எழுப்பினர்.
ஆர்ப்பட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர், ஆனால் திமுக ஆட்சியில் நீட் காரணமாக 5 மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள் எனவும் , தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாவும், அராஜகம் , அடவாடி செய்து கடைகளில் மாமூல் வசூலிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் கோவையில் 10 ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது எனவும், தமிழக அரசு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை தரவில்லை எனக் கூறினார்.