கிரிமினல் அவதூறு வழக்கில் ஜனவரி 4-ந் தேதி ஆஜராக நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன்

கிரிமினல் அவதூறு வழக்கில் ஜனவரி 4-ந் தேதி ஆஜராக நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு.;

Update: 2021-12-14 21:00 GMT
ஆலந்தூர்,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகா காந்தி. சினிமா நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர், “மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ந் தேதி இரவு பெங்களூரு சென்ற நான், அங்கு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய்சேதுபதி, பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதாக”குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய தன் மீது அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உண்மை இவ்வாறு இருக்க மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக அவதூறு பரப்பிய நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, வருகிற ஜனவரி மாதம் 4-ந் தேதி நடிகர் விஜய் சேதுபதி, அவருடைய மேலாளர் ஜான்சன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்