மகளிர்சுய உதவிக்குழு: ரூ.3000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டம் - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.;

Update: 2021-12-14 02:16 GMT
சென்னை,

தமிழக அரசின் தொலைநோக்குப்பார்வையில் 1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக கருணாநிதியின் ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்களில் சுமார் 1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத்தில் இதுவரை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு மேலும் ரூ.3000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14-ந்தேதி) தொடங்கிவைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெறும் விழாவில் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு முதல்-அமைச்சர் கடனுதவி வழங்குகிறார்.

இந்த விழாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஸ்டாலின் கடனுதவி வழங்க இருக்கிறார். மேலும் பல்வேறு  திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,  பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்ற உள்ளார். பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்