டிசம்பர் 17 வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
வருகிற 17ந்தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் வரும் டிசம்பர் 15ந்தேதி முதல் டிசம்பர் 16ந்தேதி வரை கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் டிசம்பர் 17ந்தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் வரும் 17ந்தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.