புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயியின் கடையில் ரூ.70 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயியின் கடையில் ரூ.70 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுக்கோட்டை:
உழவர் சந்தை
புதுக்கோட்டையில் உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறிகள், தக்காளி, கிழங்கு உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மொத்தம் 104 கடைகள் உள்ளன. இதில் திருமயத்தை சேர்ந்த கண்ணையா, சங்கிலியம்மாள் தம்பதியினரின் கடையும் ஒன்று உள்ளது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கியமான பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் வருவது உண்டு.
இந்த நிலையில் உழவர் சந்தையில் நேற்று வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் காய்கறி வாங்கிய படி இருந்தனர். இந்த நிலையில் சங்கிலியம்மாள் கடையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர் கடையில் ஓரமாக ஒரு பையில் பணம் மற்றும் கைப்பை, உழவர் சந்தை அட்டை ஆகியவற்றை வைத்திருந்தார்.
ரூ.70 ஆயிரம் திருட்டு
இந்த நிலையில் கூட்டத்தை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் சங்கிலியம்மாள் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை திருடிவிட்டு சென்றார். இதற்கிடையில் பையை காணாது கண்டு சங்கிலியம்மாள் மற்றும் அவரது கணவர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சத்தம் எழுப்பிய நிலையில் பக்கத்து கடை வியாபாரிகளும் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசாரும் வந்து விசாரித்தனர்.
பையில் சீட்டு பணம், காய்கறிகள் விற்பனை பணம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் வைத்திருந்ததாக கண்ணையா போலீசில் புகாரில் கூறியிருக்கிறார். பணத்தை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நேரங்களில் மர்மநபர்கள் இதுபோன்ற கைவரிசையில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் உழவர்சந்தை உள்ளது. இதில் மாவட்டத்தின் தலைநகரமான புதுக்கோட்டை டவுன் பகுதியில் உள்ள உழவர்சந்தை தான் பெரியதாகும். ஒரு நாளைக்கு 20 டன் காய்கறிகள் விற்பனையாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் கடைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். மக்களும் அதிகமாக வரக்கூடிய இடமாக இருப்பதால் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க உழவர்சந்தை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர் சந்தை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.