தோனி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு - ஐகோர்ட்டு தள்ளுபடி
ஐகோர்ட்டில் தோனி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.;
சென்னை,
ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக தோனி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தோனியின் வழக்கை நிராகரிக்கக் கோரி ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாரின் மனுவை இன்று விசாரித்த நீதிபதி, மான நஷ்ட வழக்கில் தற்போது சாட்சி விசாரணை தொடங்கி இருப்பதால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றால் பிரதான வழக்கில் கால தாமதம் ஏற்படும் என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் தோனி தொடர்ந்த பிரதான வழக்கான மான நஷ்ட ஈடு வழக்கில் சாட்சி விசாரணைக்கு மனுதாரர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.