610 ஆஸ்பத்திரிகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் மு.க.ஸ்டாலின் 18-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

மாநிலம் முழுவதும் 610 ஆஸ்பத்திரிகளில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

Update: 2021-12-08 00:21 GMT
சென்னை,

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இன்னுயிர் காப்போம் திட்டம்

‘நம்மை காக்கும் 48 - இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் வருகிற 18-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதற்கான முன்னேற்பாடு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கடந்த காலங்களில் தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோட்டுகளில் எழுதப்பெற்ற குறிப்பை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரை பெற்றுக்கொண்டு சுமார் 20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வந்தார்கள்.

ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்களை தேடி மருத்துவம் என்ற சீரிய திட்டத்தினால் 38 லட்சம் பேருக்கு இதுவரை சிசிச்சை அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இத்திட்டத்தை போன்று ஒரு சிறப்பான திட்டத்தை வருகிற 18-ந் தேதி காலை11 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

610 ஆஸ்பத்திரிகள்

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் கிராமப்புற சாலையாக இருந்தாலும், நகரத்தில் உள்ள சாலையாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் அங்கு விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு 610 ஆஸ்பத்திரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதுகுறித்த அட்டவணை விவரம் வெளியிடப்பட இருக்கிறது.

இதில் 205 ஆஸ்பத்திரிகள் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகும். பிரதான சாலைகளில் புகழ்பெற்று விளங்கக்கூடிய ஆஸ்பத்திரிகள் 405 என மொத்தம் 610 ஆஸ்பத்திரிகள் இத்திட்டத்தின்கீழ் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ரூ.1 லட்சம் மருத்துவ செலவு

இத்திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்டவரை 610 ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சேர்ப்பது, விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெறுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் சார்பில் ரூ.1 லட்சம் மருத்துவ செலவிற்கு அளிக்க இருக்கிறார்.

ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் அளிக்க இருக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 7.50 கோடியை தாண்டுகிறது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சான்று வழங்குவதில் ‘தொழில்நுட்ப தவறுகள்’ என்ற அடிப்படையில் இரண்டு, மூன்று பிழைகள் தற்காலிக பணியாளரால் ஏற்படுத்தப்பட்டது என்பது உண்மைதான். இத்தவறுகளை தடுப்பதற்குதான் மாவட்டத்திற்கு ஒரு அலுவலரை அவரது அலைபேசி எண்ணோடு, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை மூலம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தவறு நடந்தால் அவர்கள் அதனை சரி செய்வார்கள். தடுப்பூசி செலுத்தாதவருக்கு வேண்டும் என்றே தடுப்பூசி செலுத்தியதாக சான்று அளித்தால், அப்படி தவறாக சான்று அளித்தவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

13 நாடுகளாக உயர்வு

ஓமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இதுவரை இல்லை. அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 11 நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டதில் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு, அந்த 9 பேரில், 6 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படாமல், அவர் கும்பகோணத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய நாடுகள் இதுவரை 11 ஆக இருந்தது. இன்று முதல் கானா மற்றும் டான்சேனியா ஆகிய 2 நாடுகள் சேர்க்கப்பட்டு அதிக ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகள் 13 ஆக அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் உமா, ஆதிபராசக்தி ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்