சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் நடத்தப்படும் வழக்கமான சோதனைகளின் போது சில சமயங்களில் தங்கம், போதை மருந்து உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் தங்கம், 21.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுதி ரியால்கள், 18 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் ஆகியவை கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.