ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலி: தமிழக எல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து கர்நாடக- தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்பட்டுள்ளது.

Update: 2021-12-03 19:52 GMT
ஓசூர்,

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்தியாவில், ஒமைக்ரான் தொற்று கால் பதித்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்குள் ஒமைக்ரான் தொற்று நுழைந்து விடுமோ? என்ற பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக-தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், போக்குவரத்தை கண்காணிக்கவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வாகனங்களில் வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

கர்நாடகம் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த பணிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்