வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2021-11-30 20:20 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

அதேபோல் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பிரதான 7 மதகுகள் வழியாக உபரிநீராக ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, மேகமலை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் வைகை ஆற்றில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் அணைக்கு வரும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையின் 7 பிரதான மதகுகள், 7 சிறிய மதகுகள் என 14 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அணையில் இருந்து இன்னும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது. வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வைகை ஆற்றில் சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்