கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை..!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (வியாழக்கிழமை) மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்திலேயே தெரிவித்தது.
அதன்படி, பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பான அளவை விட அதிக அளவில் மழை பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்குகிறது.
அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக நேற்று 8 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சீபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (வெள்ளிக்கிழமை) கோவை, நீலகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில அனேக இடங்களில் மிதமான மழையும், 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரையில் சராசரியாக 38 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இந்த காலகட்டங்களில் பதிவாகும் மழை அளவை விட 51 சதவீதம் அதிகம் ஆகும். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் இயல்பை விட 112 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பல இடங்களில் 4 நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
சென்னையில் நேற்று பகலில் லேசான மழை பெய்தது. மாலையில் மழை தீவிரம் அடைந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதை காண முடிந்தது.
இன்று கரையை கடக்கும்
இதற்கிடையே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நாளை (இன்று) காலை கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்து வரும் கனமழையினைத் தொடர்ந்து, பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். நீர்நிலைகளின் அருகில் செல்வதையும், ‘செல்பி' எடுப்பதையும் தவிர்க்கவேண்டும். நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்கவேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்கவேண்டும்.
அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழி பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளலாம்.
டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை நெகிழி பைகளில் வைத்து எடுத்துச் செல்ல ஏதுவாக வைத்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்கவேண்டும். நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
தரைக்காற்று வீசக்கூடும்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், சில இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளை இந்த தாழ்வு மண்டலம் நெருங்கி இருப்பதால், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த காற்று காரணமாக விளம்பர பலகைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்றும், அதற்கு அருகில் பொது மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதிகளை இன்று நெருங்குகிறது. இது மேலும் புயலாக மாற வாய்ப்பு இல்லை.
ஆனால், அதேநேரத்தில் தாழ்வு மண்டலமாக மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையையொட்டி காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இன்று மாலை கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பதிவாகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி (நாளை மறுதினம்) தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. இதுவும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் எந்த நிகழ்வுகளும் நல்ல மழையை கொடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்தவகையில் இந்த நிகழ்வுகள் மூலமும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்குமா? என்பது பற்றி இன்று தெரியவரும்.