அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்: நேரில் ஆஜராக உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. .
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மணிகண்டனின் அரசு ஓட்டுநர், அலுவலக உதவியாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.