கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் சென்னையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற் காக, தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்கள்.;

Update: 2020-12-21 01:01 GMT
சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. மேலும், மின்னணு ஓட்டு எந்திரங்களை தயார் செய்வது, கொரோனா பரவிவரும் சூழ்நிலையில் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர், 2 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான இந்த குழுவில் துணை தேர்தல் கமிஷனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீ வத்சவா, தேர்தல் ஆணைய செயலாளர் மலே மல்லிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில், காலை 11.30 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்கும் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர், அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர். தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகளுடனும், வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாளை (செவ்வாய்கிழமை), பொதுப் பிரச்சினைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக, தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்க இருக்கின்றனர். அதன்பிறகு, அந்த குழுவினர் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு செல்ல இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்