புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்-அமைச்சரின் பொங்கல் பரிசு தொகை உதவாது - ரா.முத்தரசன் அறிக்கை
புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்-அமைச்சரின் பொங்கல் பரிசு தொகை உதவாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்மையில் ‘நிவர்’ புயலும், ‘புரெவி’ புயலும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு நடத்திய பேரிடர் தாக்குதலில் பெரும்பகுதி விவசாயிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாகுபடி செய்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி போனதால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய முதல்-அமைச்சர் ’விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும்‘ என உறுதியளித்தார். ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் அறிவிக்கப்பட்டு இருப்பது எந்த வகையிலும் போதுமானதல்ல. உழவர் தின விழாவில் கண்ணீர் சிந்தி நிற்கும் விவசாயிகள் கண்ணீர் துடைக்கப்படவில்லை. விவசாயத் தொழிலாளர், கிராமத் தொழிலாளர் குடும்பங்களின் கவலைகளை போக்க முதல்-அமைச்சரின் பரிசுத்தொகை கடுகளவும் உதவாது. இதனை கருத்தில் கொண்டு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் உதவியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.