மெரினாவில் இளம்பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த போதை போலீஸ்காரருக்கு அடி

சென்னை மெரினாவில் இளம்பெண்ணை தகாத உறவுக்கு அழைத்து ரகளையில் ஈடுபட்ட போதை போலீஸ்காரரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.அந்த போலீஸ்காரர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.;

Update: 2020-12-16 01:02 GMT
சென்னை:

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதும க்கள் காற்று வாங்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.நேற்று முன்தினம் முதல் மெரினாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.பொதுமக்களும் முதல் நாளே மெரினா கடற்கரைக்கு சென்று உல்லாசமாக பொழுதை போக்கினார்கள்.

முதல் நாளே மெரினாவை பரபரப்புக்குள்ளாக்கிய சம்பவம் நிகழ்ந்து விட்டது.சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் பாபு (வயது 32) என்பவரும் மெரினாவுக்கு காற்று வாங்க சென்றார்.அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது.விவேகானந்தர் இல்லம் அருகே இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார்.அவரது தந்தை அருகே சென்றிருந்தார்.

போதை போலீஸ்காரர் தனியாக நின்றிருந்த இளம்பெண்ணிடம், தகாத வார்த்தைகள் பேசி தவறான உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது.இளம்பெண் பதில் ஏதும் சொல்லாமல் நின்றிருந்தார்.அருகில் சென்றிருந்த தந்தை திரும்பி வந்துள்ளார்.அவர் போதை போலீஸ்காரர் பாபுவை கண்டித்துள்ளார்.

உடனே பாபு அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதைப்பார்த்த பொதுமக்கள் பாபுவை அடித்து, உதைத்து மெரினா போலீசில் ஒப்படைத்தனர்.மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பாபு மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது

கடந்த வாரம் வடபழனியில் போதை போலீஸ்காரர் ஒருவர் இதுபோல் இளம்பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்டதால், பொதுமக்களிடம் அடிவாங்கினார்.பின்னர் அந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.தற்போது அதுபோல மீண்டும் ஒரு சம்பவம் மெரினாவில் நடந்துள்ளது.இது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்