அதிமுக நினைத்திருந்தால் குடியுரிமைச் சட்டம் நிறைவேறி இருக்காது - திண்டுக்கல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதிமுக நினைத்திருந்தால் குடியுரிமைச் சட்டம் நிறைவேறி இருக்காது என்று திண்டுக்கல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
திண்டுக்கல்,
அதிமுக நினைத்திருந்தால் குடியுரிமைச் சட்டம் நிறைவேறி இருக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்ட சிறப்புரையில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், “புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை. ஏழை, எளிய மாணவர்களின் ஆரம்ப கல்வியைக் கூட தடுக்க திட்டமிடப்படுகிறது. உதவித் தொகையை நிறுத்துவது மாணவர்களின் கல்வியை தடுப்பதற்கு சமம்.
விவசாயிகளின் போராட்டத்தால் தலைநகர் டெல்லி கடந்த 20 நாளாக நடுங்கிக் கொண்டிருக்கிறது. மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை. ஆனால் அவர்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் வரவழைத்து இந்த சட்டம் நல்ல சட்டம் என மத்திய அரசு பாடம் எடுக்கிறது.
போராடும் விவசாயிகளை உள்துறை அமைச்சர் சந்திக்காதது என்ன காரணம்? வருகின்ற 18ம் தேதி சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறக்கூடிய உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நூற்றாண்டு காலக் கோரிக்கை.
அதனை முதல் நிபந்தனையாக வைத்து கலைஞர் பெற்றுக்கொடுத்தார். தமிழ்மொழி காக்க உருவாக்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று பிரதமர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சமஸ்கிருத மொழி திணிப்பை முதலமைச்சர் எதிர்க்கவில்லை. மத்திய அரசு பணி தேர்வுகளை இந்தியில் நடத்துவதை தமிழக அரசு கண்டிக்காதது ஏன்? என்றும் தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை என முதல்வரால் கூற முடியுமா?” என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.