என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதலமைச்சர், காவல்துறைக்கு நன்றி - ஆ.ராசா

என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதலமைச்சர், காவல்துறைக்கு நன்றி என்று திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார்.

Update: 2020-12-13 07:43 GMT
சென்னை,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக, திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதலமைச்சர், காவல்துறைக்கு நன்றி என்று திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார். 

இதுகுறித்து திமுக எம்பி ஆ.ராசா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'அண்மையில் 2-ஜி வழக்கு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற தான்தோன்றித்தனமான அவதூறுகளை என் மீது சுமத்தியதைத் தொடர்ந்து முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றும், அவர் ஊழல் செய்து அடித்த கொள்ளை அரசியல் சட்டத்தின் மீது அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியைச் சிதைத்தது மட்டுமன்றி, ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக விளங்கும் அரசியல் சட்டத்தையே படுகொலை செய்த செயலாகும் என்றும் தெரிவித்தேன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு நான் பேசியதை, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 மற்றும் 505-(1)(பி)-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழக காவல்துறை என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதல்வருக்கு எழுதிய திறந்த மடலில் உள்ள எந்தக் கருத்தையும், வார்த்தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்க வக்கற்ற முதல்வர், தமிழக காவல்துறை மூலம் கோழைத்தனமாக இவ்வழக்கை என் மீது தொடுத்துள்ளார்.

தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இவ்வழக்கின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கண்டனக் கருத்துகளை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்ற அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதல்வருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப்படியான வாதங்களைத் தடுக்கலாம் என்றோ, முதல்வர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை ஏதும் இருக்க முடியாது.

என் மீது போடப்படும் வழக்கைப் பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலையும், ஜெயலலிதாவைப் பின்தொடர்ந்து அவரைப் போலவே ஊழலில் திளைக்கும் முதல்வரையும், இந்த அரசையும் தோலுரித்துக் காட்டுவதோடு விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில், இப்போது ஊழலில் திளைக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'.

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்